விதி வலியது’ன்னு சொல்றதுல எதோ இருக்குன்னுதா தோணுது. இல்லேன்னா ‘சொற்கப்பலும் தக்கையும் சேர்ந்து நடத்துற கூட்டத்துல வந்து கருத்துரை சொல்லுங்க’ன்னு அஜயன் பாலா என்னைக் கூப்பிட்டிருக்கமாட்டார். நானும் பொட்டியத் தூக்கிட்டு சேலத்துக்கு பஸ்ஸேறிப் போயிருக்கமாட்டேன். அதெல்லாஞ் சிக்கல் இல்லே. வா.மு.கோமுவோட ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’பத்தி நான் கருத்துரை சொல்றேனேன்னு என்னய சொல்லவைச்ச பல்லி எதுன்னு தெரியலை. ‘விதிங்கிறாங்க… பல்லிங்கிறாங்க… சரியான பிற்போக்குவாதியா இருப்பாங்க’நல்லாப் படிச்ச செலபேர் கதைய அவுத்து விடுவீங்கன்னு எனக்குந் தெரியுது. உப்பு,புளி,காரசாரத்துக்காக இதெல்லாம் எழுதிக்கிறதுதான தவிர்த்து வேற புனித நோக்கம் ஒண்ணுங் கெடயாது.
ஆங்… அந்தப் புத்தகம் கைல இருக்குங்றதனால அதைப் பத்திக் கருத்துச் சொல்றதா ஒப்புக்கிட்டனோ என்னமோ…. அந்தப் புத்தகத்த மொதல்லயும் ஒருவாட்டி புரட்டிப் பாத்திருக்கேன். எப்பிடி எப்பிடிப் படுத்துக்கலாம்னு செல விசயம் கண்ணுல படத்தான் செஞ்சுது. ஆனாலும், புத்தகம் முழுசுமே வில்லங்கம் விவகாரம்னு தெரிஞ்சிருந்தா வேணாஞ் சாமீன்னு ஒதுங்கியிருப்பேன்.
அண்மைல (அண்மைங்கிறது இலக்கிய காலத்துல எத்தனை வருஷங்கிறது நமக்கெல்லாம் தெரியும்) வெளியாகியிருக்கிற ஆறு நாவல்களப் பத்தின கூட்டம் அது. தாண்டவராயன் கதை (பா.வெங்கடேசன்), நிலாவை வரைபவன் (கரிகாலன்), துருக்கித் தொப்பி (கீரனூர் ஜாகிர் ராஜா), சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் (வா.மு.கோமு), நெடுஞ்சாலை (கண்மணி குணசேகரன்), வெட்டுப்புலி (தமிழ்மகன்) இந்த ஆறைப் பத்தியுந்தான் விமர்சனக்கூட்டம். இது மே மாசம் 8ஆந் திகதி நடந்தது. ஆண்டு ஒங்களுக்கெல்லாந் தெரியும். நடக்கிற நடப்பைப் பாத்தா 2010இல புத்தகம் வெளிவந்தா 2020ல தாங் கூட்டம் போடறாங்கன்னு நீங்க சொல்வீங்க. சேலத்துலயும் நல்ல வெயில் காயுது. சிவகாமி அம்மையப்பர்னு ஒரு பள்ளிக்கூட மரநிழல்லதான் கூட்டம் நடந்துச்சு. இந்த வெயில்ல எப்டித் தாக்குப் புடிக்கப்போறம்னு ஆரம்பத்துல தோணிட்டே இருந்துச்சு. அப்றம் விமர்சனக்கூட்டத்துல பறந்த சூட்டுல வெயில் சூடு அடங்கிப்போச்சு. ஆனா ஒண்ணு சொல்லிக்கணும். வழக்கமான இலக்கியக் கூட்டம் மாதிரி இல்லை இது. மேடைல பத்துப் பேர் ஏறி ஒக்காந்துக்கிட்டு சபைல இருக்கிறவங்க விடுற கொட்டாவியைக் கண்டுக்காம இஷ்டத்துக்குப் பேசிட்டே போற வில்லங்கம்லாம் இதுல இருக்கலை. எல்லாரும் பேசினாங்க. எல்லாரும் கேட்டுக்கிட்டாங்க, செலபேரு கேட்காம சத்தம் போட்டாங்க. அதிகமா முக்கல் முனகல் வந்தது எதுக்குன்னு கேட்டீங்களானா ‘சாந்தாமணி’க்குத்தான்.
‘தாண்டவராயன் கதை’படிக்கப் படிக்க மறந்து பின்னால போயிட்டே இருந்துச்சுன்னு ஸ்ரீநேசன் சொன்னதுபோல ஒரு மறதி கூட்டம் முடிஞ்சதும் எனக்கும் வந்திருக்கு. ஆனாலும், ஞாபகத்துல என்னெல்லாம் இருக்கோ அதெல்லாம் எழுதிப்புடலாம்னு நெனைக்கிறேன். இல்லைன்னா வரலாற்றைப் பதிவு பண்ணலேன்னு யாராச்சும் சொல்லிடுவாங்க பாருங்க. இதே வரியை நீங்க வேற ஒருத்தரோட பதிவுலயும் சமீப காலங்கள்ல படிச்சிருப்பீங்க. ஜமாலனோட வலைப்பூவிலன்னு நெனைக்கிறேன்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமைலதான் கூட்டம் நடந்துச்சு. அஜயன் பாலா கூட்டம் தெசைமாறிப் போயிடாம ‘வந்த வேலையை ஒழுங்காப் பாக்கணும்’ங்கிற தோரணையோட கூட்டத்தை நடத்தினார். தக்கை பாபு நன்றியுரை சொன்னார். வரவேற்புரை சொன்னது ஈசன் இளங்கோன்னு நெனைக்கிறேன். கடேசிவரைக்கும் ரொம்ப ஒழுங்கும் அமைதியும் காத்த ஒருத்தரைச் சொல்லணும்னா கூட்டத்துக்குத் தலைமை தாங்கின சுப்ரபாரதிமணியனத்தான் சொல்லியாவணும். அஜயன் பாலா, தக்கை பாபு, விஷ்ணுபுரம் சரவணன், கண்டராதித்தன், அய்யப்ப மாதவன், சந்திரா, சக்தி அருளானந்தம், கீதாஞ்சலி பிரியதர்ஷினி, தமிழ்நதி(நாந்தான்), தமிழ்மதி, (அவங்க கூட இன்னொருத்தங்க பேர் தெரியலை) ஜோஸ் அன்றாயின், (தமிழ்க்காரர்தாங்க) இசை, இளங்கோ கிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன், (பக்கத்துல பக்கத்துல எப்பவும் வந்துடுவாங்க)ஸ்ரீநேசன், சாஹிப்கிரன், அசதா, வா.மு.கோமு, சிபிச்செல்வன், க.மோகனரங்கன், பால்நிலவன், தூரன் குணா, மு.ஹரிகிருஷ்ணன், கண்ணன் இப்டி கணிசமான கவுஞ்ஞர்களும் எழுத்தாளர்களும் பார்வையாளர்களும் வந்திருந்தாங்க.
நிலாவை வரைபவனை வரைஞ்ச கரிகாலன் எதோ சோலி இருக்குன்னுட்டு வரலை. காலைல நடந்த முதல் அமர்வில கரிகாலனோட புத்தகத்தைப் பத்தி அசதா பேசினார். நான் அப்போ என் கருத்துரைய அச்சுல எடுத்துட்டு வராத கடுப்புல இருந்தேன். அதனால அத சரியா கவனிக்க முடியலை. ஆனா அந்தக் கட்டுரையை வளர்மதி முகப்புத்தகத்துல எடுத்துப் போட்டிருக்காரு. ‘நான் அண்மைல படிச்ச கட்டுரைகள்ள இதுவும் முக்கியமானது’னு வளர்மதி அதுல சொல்லியிருக்கார். அதப் படிக்கலாம்னுட்டு தேடிப் பாத்தா கெடைக்கலை. காரணம் என்னோட முகப்புத்தகத்துல வளர்மதி எப்டியோ விடுபட்டுப் போயிருக்கிறார். அசதாவோட பக்கத்துலயும் கெடைக்கல. அடிக்கடி பேசாட்டி இப்டித்தான். சேத்துக்கச் சொல்லி ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்கேன். அப்புறம் கீரனூர் ராஜாவோட ‘துருக்கித் தொப்பி’பற்றி இளங்கோ கிருஷ்ணன் ஒரு அருமையான கட்டுரை வாசிச்சார். ரொம்பவே மெனக்கெட்டு எழுதின கட்டுரையா அது இருந்துச்சு. ஒரு ஆய்வுக் கட்டுரையோட நேர்த்தி அதுல இருந்ததா அஜயன் பாலா சிலாகிச்சுச் சொன்னார். கீரனூர் ஜாகிர் ராஜாவோட மற்ற நாவல்களையும் மத்த முஸ்லிம் எழுத்தாளர்களால தமிழ்ல எழுதப்பட்டிருக்கிற நாவல்களையும் பத்தி கொஞ்சநேரம் கூட்டத்துல பேச்சு ஓடிட்டிருந்துச்சு.
அப்புறம் சாஹிப்கிரன் வா.மு.கோமுவோட ‘சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும்’பற்றி கட்டுரை வாசிச்சார். ஆ… அதுக்கு முன்னாடி வா.மு.கோமுவை மணல்வீடு ஹரிகிருஷ்ணன் அறிமுகம் செய்ஞ்சுவைச்சுப் பேசினார். ‘அவர் என்னோட வாத்யார். அவர் எழுத்துக்கள நான் காதலிக்கிறேன்’அப்டீன்னு ஆரம்பிச்சு அவருக்கேயுரிய மண்வாசனை நடைல சுவாரசியமாப் பேசினார். சரிதான் அப்டீன்னு நெனைச்சுக்கிட்டேன். ‘இதுவொரு இன்பமூட்டக்கூடிய எழுத்து… ஆனாலும், ஏனைய விடயங்களிலும் வா.மு.கோமு கவனஞ் செலுத்தியிருக்க வேணும்’ங்கிற ரீதியில சாஹிப்கிரனோட பேச்சு அமைஞ்சிருந்துச்சு. எதோ சொல்ல வந்து சொல்ல வந்து சொல்லாம தொண்டைக்குள்ள இறுக்கிப் பிடிச்சுக்கிட்ட மாதிரி ஒரு விமர்சனக் கட்டுரை அது. அப்றந்தான் ஆரம்பிச்சுது வெனை. ‘யாராச்சும் கருத்துச் சொல்லுங்கப்பா’ன்னார் அஜயன். நான் கம்யூட்டர்ல தட்னத பேப்பர்ல எடுத்துட்டுப் போகலை. சேலத்துல அப்போ மின்சாரம் அறுந்திருந்த நேரம். சரிதான்னுட்டு ஞாபகத்துல இருந்தவரைக்கும் எங் கருத்தைச் சொன்னேன். நான் என்ன பேசுனேன்கிறதோட சாரம் இதுதாங்க:
“நான் இந்தப் புத்தகத்தப் பத்தி கருத்துரை சொல்றதுக்கு முன்னாடி ஒரு விசயம் சொல்லியாகணும். அதாவது நான் ஒரு அடிப்படைவாதி கெடையாது. அப்றம் இந்தக் கற்பு, கலாச்சாரம் ஒழுக்க மதிப்பீடுகள்ளயும் கறாரான ஆள் இல்லை. நான் தமிழ்ல ஒரளவுக்கு படிச்சுக்கிட்டிருக்கிற ஆள்தான். அதனால இதையொரு நாவல்னு என்னால ஏத்துக்க முடியலை. இந்தப் புத்தகத்த நான் வாசிக்க ஆரம்பிச்சு ஒரு நூறு பக்கத்துக்கு மேல போனப்புறமும் என்னால கதையோட ஒன்ற முடியலை. பள்ளிக்கூடத்துல படிக்கிற பழனிச்சாமி சாந்தாமணியை விரட்டி விரட்டிக் காதலிக்கிறான். அவ அவனைப் பாக்காம மூஞ்சியத் திருப்பிக்கிறா. பழனிச்சாமிய ஜான்சி காதலிக்கிறா. அப்றம் பழனிச்சாமி ஜான்சியோட சில்மிஷம் பண்றான். சாந்தாமணி கதை முடிஞ்சப்புறம் பழனிச்சாமி அவளோடயும் இவளோடயும் எவளோடயும் படுத்துக்கிறான். அவன் எப்டி எப்டியெல்லாம் யார் யாரோடல்லாம் படுத்துக்கிறாங்கிறதப் பத்தின பக்கம் பக்கமான விஸ்தாரமான விவரிப்புதா இந்த நாவல். என்னடாது இப்டி வில்லங்கமாயிருக்கேன்னு முன்னுரையப் போய்ப் படிச்சுப் பாத்தா ‘இந்தக் கதைல வர்ற கீதாவும் பழனிச்சாமியும் அவளும் இவளும் இப்பயும் இருக்கத்தான் இருக்காங்க. இதெல்லாம் அசாத்தியம்னு நீங்க நெனைக்கப்படாது’ன்னு எழுதியிருக்காரு. இதெல்லாம் தனக்கு பாதகமான எதிர்வினை வரும்னு தெரிஞ்சுக்கிட்டு அதத் தடுக்க கவசமா முற்கூட்டியே எழுதிவைக்கிறது. பக்கம் பக்கமா பாலியலை எழுத்தா நிரப்பி வைச்சிருக்கிறதத் தவிர்த்து வா.மு.கோமுவோட இந்தப் புத்தகத்துல ஒண்ணுங் கெடயாது. காமத்தை எழுதக்கூடாதுன்னு நாஞ் சொல்லவரலை. நானுங்கூட எழுதியிருக்கேன். ஆனா, எழுத்துக்குள்ள காமம் வரலாம். காமம் மட்டுமே எழுத்தாயிருந்தா அதுக்கு வேற பேரு.
சில இணையத்தளங்கள் கலவியை மிருக சர்க்கஸா, மாமிசக்கூடலா மலினமாக்கிட்ட அதே வேலையை இலக்கியமுஞ் செய்றது சரிதானா? காமம் ஒண்ணும் பாவம் கிடையாது. ஆனாலும், காமத்தினால் மட்டுந்தான் இந்த உலகம் இயங்கிட்டிருக்கிறதுமாதிரியான ஒரு சித்திரம் இந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டிருந்தப்போ கெடைச்சுது. போர்க்களத்துல பிணங்களா விழுந்து கிடக்கிறது மாதிரி இந்தப் புத்தகம் நிறைய உடல்களா அவிழ்ந்து கிடக்குது. உயிர்மை கூட்டத்தில இந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசின முருகேசபாண்டியன் சொன்னார்.“இதைப் படிக்கிறபோது பெண்கள் எல்லோரும் பாவாடை நாடாவை அவிழ்த்து கையில வைச்சுக்கிட்டு ரெடியா இருக்கிறமாதிரி தோணுச்சு”ன்னு. எனக்கும் அதே கருத்துத்தான். இந்த சமூகத்தில இருக்கிற அநேகமான பெண்கள் காமம் என்கிற தீர்க்கமுடியாத கொடிய வியாதியினால பீடிக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் அந்தரிச்சு அலமலந்து ஓடித்திரிவதான ஒரு காட்சி என் மனக்கண்ணில வந்துபோச்சு. பெண்களை இந்த நாவல்ல ரொம்ப மலினப்படுத்தியிருக்கிறதா எனக்குத் தோணுது.
இந்தப் புத்தகத்துல வர்ற பழனிச்சாமி என்கிற ஆளுக்காக பெண்கள் வரிசையா நின்னுக்கிட்டு ஏங்கிறதைப் பார்த்தா மகாக்கொடும்மையா இருக்கு. அவனுக்கு உடம்பைக் குடுக்கிறதைத் தவிர்த்து அந்தப் பெண்களுக்கு வாழ்க்கைல இலக்குங்கிறது ஒண்ணுமே கிடையாதாங்கிற எரிச்சல் வருது. அத்தோட ஒரு ஆணால தன்னோட சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி எத்தனை பொண்ணுங்களை வேணும்னாலும் படுக்கைல சாய்ச்சுக்க முடியும்கிறது விரசமா இருக்கு. ‘இதெல்லாம் சாத்தியம்தானுங்கோ’ன்னு முன்னுரையிலயே கோடி காட்டியிருக்கிற வாமு.கோமுகிட்ட ஒரேயொரு கேள்வி கேட்கணும்னு தோணுது. எங்கயாச்சும் தான் காதலிக்கிற பொண்ணுமுன்னாடி, வயசுக்கு வந்த அவ தங்கையை எந்த ஒரு ஆணாவது கையில தூக்கிக்குவானா? அப்படியே தூக்கிக்கிட்டாலும் காதலி இருக்கும்போதே அவ தங்கைக்கிட்ட சில்மிஷம் பண்ணுவானா? அப்பிடிப் பண்ணின ஒரு ஆளை அந்தப் பொண்ணு சாந்தாமணி காதலிப்பாளா? (இப்டில்லாம் நடக்கும்ங்கிறாரு சிபிச்செல்வன்)
அப்புறம் தமிழில புதுசாப் படிக்கணும்னு வர்ற ஒருத்தன் அல்லது ஒருத்தி அவங்க காலக்கொடுமையினால இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாங்கன்னு வைச்சுக்கோங்க… இலக்கியம் பற்றி அவங்களுக்கு என்ன மரியாதை வரும்கிறீங்க…! இலக்கியத்துக்கு சமூகத்துல இப்பவும் ஒரு மரியாதை மயிருங் கெடயாதுன்னு செலபேர் சொல்லலாம். அதை உயிருன்னு நெனைச்சுட்டு வாழுற செலபேர் எல்லாக் காலத்துலயும் இருந்துக்கிட்டுத்தான இருக்காங்க.
பெண்ணெழுத்துப் பற்றி பரவலான சர்ச்சைகள் ஓடிட்டிருக்கிற இந்தக் காலகட்டத்துல ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ஐ ஒரு பெண் எழுதியிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். ரொம்ப காமெடியான (குரூரமானதும்) காட்சிகள் கண்முன்னாடி வந்துபோச்சு. தப்புப் பண்ணினவங்களை ஊருக்கு வெளியில ஒதுக்கிவைக்கிறதுமாதிரி சுடுகாட்டுக்குப் பக்கத்துல கொண்டுபோய்த் தள்ளிவைச்சிருப்பாங்கங்கிறதுல சந்தேகமேயில்லை. ‘முலைகள்’னு தன்னோட கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு வைச்சதுக்காக கவிஞர் குட்டி ரேவதியை இருட்டடிப்பு செய்த சமூகந்தான இது?
வாமு.கோமு எழுத்தைப் பத்தி நீங்க கருத்துரைக்க வேண்டியதில்லை… தவிர்த்துடுங்க… எதுக்கு தேவையில்லாம பிரச்சனையை வளர்த்துக்கிறீங்கன்னு என்னோட நண்பர்கள்ல ரெண்டு மூணு பேர் சொன்னாங்க. “விமர்சனங்கிறதை ஏத்துக்கிற பக்குவம் அவருக்கு இருக்கும்னுதான் நான் நினைக்கிறேன். அதை தனிப்பட்ட வன்மமா அவர் வளர்த்துக்கமாட்டார்”னு நான் பதில்சொன்னேன். தவிர, இது அவரோட புத்தகம் தொடர்பானதுதான… அவரைப் பற்றிக் கிடையாதுல்ல. ஆட்களைப் பற்றித்தான் அதாவது அவங்க தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித்தான் விமர்சனம் பண்ணக்கூடாது. அது தப்பு. அவர் படைப்பைப் பற்றி விமர்சனம் பண்ணலாம்ல. நான் இன்னும் கள்ளி, தவளைகள் குதிக்கும் வயிறு இதெல்லாம் படிக்கலை. கள்ளி நல்லா வந்திருக்கிறதா சொல்றாங்க. படிக்கணும்.”
இவ்ளோதான் நான் பேசுனது. ஒடன சிபிச்செல்வன்ட்ட இருந்து ஒரு ஆட்சேபக்குரல் கௌம்புது.
“இந்த சமூகத்துல இப்டியெல்லாமா நடக்கும்ங்கிற மாதிரி தமிழ்நதி பேசுனாங்க. ஏராளமா நடக்குது. தமிழ்நதிக்குத்தான் அதெல்லாந் தெரியலை”
நான் எவ்ளோ விசயம் சொல்லியிருக்கேன். இவர் இத எப்டி மாத்துறார் பாருங்கன்னு நான் உள்ளுக்குள்ள நெனைச்சுக்கிட்டேன்.
சந்திரா ஒடன சத்தம் போட ஆரம்பிச்சா.
“இதெல்லாம் ஆணாதிக்க எழுத்து… இதயெல்லாஞ் சகிச்சுக்க முடியாது”அப்டிங்கறா,
“ஒரு ஆளத் தேடித் தேடிப் போய்ப் படுத்துக்கிறதத் தவிர்த்து பொண்களுக்கு வேற வேலையே கெடயாதுங்கிறீங்களா…?”;-இது நான்.
“பெண்களை வெறும் தசைப் பிண்டமாப் பாக்கிற வேலை இதுன்னு உங்களுக்குத் தோணலையா”-இது சந்திரா.
சிபிச்செல்வன் ‘இல்லல்ல… அவர் அப்டியெல்லாம் நெனைச்சு எழுதியிருக்கமாட்டார்’அப்டீன்னு தொடர்ந்து பேசிட்டே இருந்தார். ‘அப்புறம் இதெல்லாஞ் சமூகத்துல உள்ளதுதா’ங்கிற தொனியை கடேசிவரைக்கும் விடலை. அதுவா பிரச்னை? போதாக்குறைக்கு வா.மு.கோமு பக்கத்துல இருந்த ஒரு நண்பர் ஏதோ சத்தம் போட ஆரம்பிச்சார். அவர் பேரு தெரிலை.
“இதெல்லாம் மூடி மூடி வைக்கணும்கிறீங்களே… இப்பல்லாம் பள்ளிக்கூடங்கள்லயே சொல்லிக் குடுக்கிறாங்க தெரியுமா?”ங்கிறாரு சிபிச்செல்வன்.
“எப்டி எப்டில்லாம் படுத்துக்கலாம்னா? இந்தப் புத்தகத்த ஒங்க கொழந்தைக்கு நீங்க வாசிக்கக் குடுப்பீங்களா?”ன்னு கேக்கிறா சந்திரா.
“நாங்க முலை, யோனின்னு ஒண்ணு ரெண்டு வார்த்தைகள கவிதைல வைச்சு எழுதினா கலாச்சாரத்தைக் கெடுக்கிறாங்க லபோதிபோன்னு வயித்துல அடிச்சுக்கிட்டு சத்தம் போடுறீங்களே… இந்தப் புத்தகம் கெட்டவார்த்தைக் களஞ்சியம் மாதிரி இருக்கே… இதுக்கு ஒண்ணுஞ் சொல்லமாட்டீங்களே”-நான்.
“இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிற யாரும் பெண்ணெழுத்துக்கு எதிரானவங்க கெடயாது”-சிபிச்செல்வன்.
“இதுல நாவலுக்குரிய எந்தக் கூறு இருக்கு?”
“இது இப்டித்தான் இருக்கணும்னு எதாவது உண்டா? எல்லாத்தையும் கலைச்சுப் போடறதுதான இலக்கியம்”
“அப்ப நாவல் விமர்சனக் கூட்டத்துல இந்தப் புத்தகம் எப்டி வந்துச்சு?”
சந்திரா நல்லா சண்டை போட்டா.அப்புறம் சிபிச்செல்வனும் ஜோஸ்ம் ஒருத்தரையொருத்தர் பாத்து எதோ பேசிக்கிட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் ‘சட்டகம், பின்னவீனத்துவம், கட்டுடைத்தல்’இந்த மாதிரி வார்த்தைகளப் போட்டு மெரட்டிட்டிருந்தாங்க. அப்பறம் அஜயன் ‘அமைதி… அமைதி…’ன்னு எந்திரிச்சாரு. ‘யாராவது கருத்துச் சொல்லணும்னா முன்னாடி வந்து பேசுங்க… இப்டி உங்களுக்குள்ளயே பேசிட்டிருந்தா எப்டி’ன்னாரு.
இளங்கோ கிருஷ்ணன் எழுந்து வந்தார். வழக்கமான நிதானமான பாவம்.
“போர்னோகிராபிக்கும் போர்னோ இலக்கியத்துக்கும் வித்யாசம் இருக்கு. இது போர்னோவா நின்னுடுச்சு. ஆர்ட் பார்மா மாறலை… இத வைச்சு கைமுஷ்டி அடிச்சுக்கலாம்.”அப்டின்னார் இளங்கோ.
பால்நிலவன் எழுந்து வந்தார்.
“தமிழ்நதி சொன்னதுல ஒரு விசயத்த மட்டும் எடுத்துக்கிட்டுப் பேசப்படாது. பெண் எழுத்து தொடர்பான சர்ச்சைல்லாம் ஓடிட்டிருக்கிற இந்தக் காலத்துல இதையே ஒரு பெண் எழுதியிருந்தா என்னவிதமான எதிர்வினை ஏற்பட்டிருக்கும்னு அவங்க கேட்டாங்க. அப்புறம் இதுல வர்ற பெண்கள் காமப்பண்டங்கள்ங்கிறதுக்கு மேல பேசப்படலையேன்னு கேட்டாங்க. பேச்சு திசைதிரும்பிடப்படாது”ன்னார்.
“சரி… இந்தப் புத்தகத்த எழுதி இப்டியெல்லாம் சர்ச்சையக் கிளப்பிவிட்ட வா.மு.கோமு என்ன சொல்றாருன்னு இப்ப கேட்டுக்கலாம்”னாரு அஜயன்.
“நாவல் எழுதினா நல்லா விக்கும்னு நண்பர்கள் சொன்னாங்க. அதுக்காக எழுதினதுதான் இது. எங் கள்ளி நாவல் தோத்துப்போயிடுச்சு. பெருசா விக்கலை. இதாவது காசு குடுக்கும்னு நெனைச்சு எழுதினேன். வேற பெரிய நோக்கங்கள் எல்லாம் கெடயாது. தஞ்சைப் பிரகாஷோட மீனின் சிறகுகள் புத்தகவத்தைப் பக்கத்துல வைச்சுக்கிட்டுத்தான் இத எழுதினேன். தமிழ்நதியோட கானல் வரிய மூணு நாளைக்கு முன்னால படிச்சேன். கடுப்பாயிடுச்சு. என்னோட கொளத்தங்கரை இதெல்லாங்கூட அச்சுக்குக் குடுத்திருக்கலாமேன்னு அப்போ தோணுச்சு.”ன்னு பதிலுக்கு வாரினாரு.
அட கொக்கமக்கா! நானும் சந்திராவும் கொழுத்துற வெயில்ல மிச்சமிருந்த தொண்டத் தண்ணி காயுறவரைக்கும் சத்தம் போட்டிருக்கோம். இவுரு சாவதானமா எந்திருச்சு வந்து ‘இப்டி எழுதுனா விக்கும்னாங்க… அதனால அப்டி எழுதினேன்’ங்கிறாரே… நம்மள இப்டிக் காலி பண்ணிட்டாரேன்னு நெனைச்சுக்கிட்டேன். ஒலகந் தெரிஞ்ச ஆளு. நம்மள மாதிரியா?
மொத அமர்வு கலகலப்பா இப்டி முடிஞ்சுபோச்சு. சாப்பிடக் கூப்டாங்க. எங்களுக்கெல்லாம் மரக்கறி (வெஜிடபில்னு சொல்வாங்கல்ல…. அது) சாதமும், தக்காளி சாதமும் பரிமாறினாங்க. நல்ல பசி. சாப்டிட்டு வந்து மரநிழல்ல ஒக்காந்துக்கிட்டோம். சாப்டும்போது ஹரிகிருஷ்ணன் பக்கத்துல இருந்தவங்களல்லாம் வாரிக்கிட்டே சாப்ட்டாரு.
ரெண்டாவது அமர்வைக் கலகலப்பாக்கினவங்கன்னு கண்டராதித்தனையும் கண்மணி குலசேகரனையுஞ் சொல்லலாம்.
தமிழ்மகனோட ‘வெட்டுப்புலி’புத்தகத்தப் பத்தி நம்ம பைத்தியக்காரன்(சிவராமன்) ஒரு கட்டுரை எழுதி அனுப்பியிருந்தார். அத தக்கை பாபு படிச்சார். கட்டுரை ஆரம்பமே அசத்தலா இருந்துச்சு. என்னய எது அசத்தும்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும்ல. அவரு சொல்றாரு… ‘அதிகாரங்களால் கழுத்து துண்டாடப்பட்ட புலி நமக்கு முன் இருக்கிறது. நான் இங்கே சொல்வது எந்தப் புலி என்பது உங்களுக்குப் புரியும்’இந்தப் பாணியிலயே கட்டுரை போய்ட்டிருந்துச்சு. அது ஒரு அழகான விமர்சன உத்தின்னு கூட்டத்துல இருந்தவங்க பேசிக்கிட்டாங்க. அதாவது, ஒரு புத்தகத்தை மையமா வைச்சு ஆரம்பிச்சு புத்தகத்துக்குள்ளயும் புத்தகத்துக்கு வெளில புறச்சூழல் பத்தியும் விமர்சனங்கள முன்வைக்கிறது. ரொம்ப சுவாரசியமான கேட்பனுபவமா அந்தக் கட்டுரை இருந்துச்சு. முடிஞ்சா அதோட ஒரு நகலை பைத்தியக்காரன்ட்ட கேட்டு வாங்கிக்கணும்.
அப்புறம் கண்மணி குணசேகரனோட ‘நெடுஞ்சாலை’நாவலைப் பத்தி முத்துவேல் கட்டுரை வாசிச்சார். ‘இயந்திரங்களோட வேலை பாக்கிற ஒரு மனுசனோட இதயம்’பத்தி அவர் பேசுனார்னு நெனைக்கிறேன். ஆழ்ந்து படிச்சு எழுதின நல்ல கட்டுரை. நம்ம ச.முத்துவேல்தான். விமர்சனத்த விடவும் சுவாரசியமா இருந்தது எதுன்னா கண்மணி குணசேகரனோட பேச்சுத்தான். அவர் பேசி முடியற வரைக்கும் கூட்டம் குலுங்கிக்கிட்டே இருந்துச்சு. அவ்ளோ சிரிப்பு.
“இதெல்லா எனக்குத் தெரியாதுங்க. யெங்கூர்ல காதலனும் காதலியும் முத்தம் குடுக்கிற காட்சி வந்தா பூவும் பூவும் ஒரசிக்கிற மாதிரி காட்டுவாங்கல்ல… அப்டித்தான். ரொம்ப சூதானமா இருப்பாங்க.”
அப்புறம் அவர்பாட்டுக்கு எலக்கியக் கூட்டங்களை வாருறாரு. மேட்டுக்குடிப் பொய்மைங்கள கலாய்க்கிறாரு. கடேசில சொல்றார் “என் புத்தகத்தை நம்பி வாங்கலாங்க. நான் ஒங்கள ஏமாத்தமாட்டேன்”அப்டிச் சொன்னதும் ஒருமாதிரி நெகிழ்ச்சியா இருந்துச்சு. மேலுக்கு அவர் பேசுனதெல்லாம் நகைச்சுவையா இருந்துச்சு. ஆனா அதுக்குப் பின்னாடி ஒரு சோகம் ஒட்டிக்கிட்டே இருந்தமாதிரி தோணுச்சு. ‘ஏலா மக்கா… எம்மாம் பொய் இந்த வுலகம்’ங்கிற எள்ளலைப் பாக்க முடிஞ்சுச்சு. அவர் புத்தகங்கள அவசியம் படிக்கணும்னு நான் நெனைக்கிறேன்.
இந்தக் கூட்டத்தோட முக்கியமான நிகழ்ச்சிக்கு நாம வந்தாச்சு. அதாவது, பா.வெங்கடேசனோட ‘தாண்டவராயன் கதை’விமர்சனம். பா.வெங்கடேசன் கூட்டத்துக்கு வர்லை. ஸ்ரீநேசன்தான் ‘தாண்டவராயன் கதை’பத்திப் பேசுனாரு. ஒரு மனுசன் ஒரு புத்தகத்துக்குள்ள போயி ஒக்காந்துக்கிறது எப்டின்னு அவர் பேசுறதக் கேட்டிட்டிருந்தப்போ தோணுச்சு. ஒங்களுக்கெல்லாம் புரியிற மாதிரி சொல்லணும்னா ‘புத்தகத்துக்குள்ள வசிக்கிறது’. ஸ்ரீநேசன் மொதல்ல அந்தக் கதையச் சொல்றாரு. ஐயோ சொல்லாதிங்களேன்னு நான் மனசுக்குள்ள கூவிக்கிறேன். ஏன்னா நான் நிக்கிறது 73ஆவது பக்கத்துல. இவரு சொல்லிட்டா மீதியப் படிக்கிறதுல இருக்கிற சுவாரசியம் போயிடும்ல.
ஸ்ரீநேசனுக்குள்ள இருக்கிற கவிஞன்தான் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்கணும். சாபக்காடு, எலினார், ட்ரிம்ஸ்டாம்… இப்டி எதோ சொந்தவூரு சொந்தக்காரங்களப் பத்திப் பேசுறமாதிரி பேசிட்டே இருக்காரு. ‘இதை வெங்கடேசன்தான் எழுதினாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு’அப்டீன்னு அவர் சொல்றப்போ கூட்டத்துல இருந்து ஒரு குரல். ‘எங்களுக்கும் அதே சந்தேகந்தான்’. நம்ம ஆளுங்களுக்கு இந்த நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லேன்னு வைச்சுக்கங்களேன்… காக்கா கொத்திட்டுப் போயிடும்.
“என் மண்டைக்குள்ள ஒரு குரல் கேட்கும்போது எழுத ஆரம்பிப்பேன். அந்தக் குரலோட வேகத்துக்கு ஈடு கொடுத்து எழுத முடியாமத் திணறியிருக்கேன்”அப்டீன்னு வெங்கடேசன் ஸ்ரீநேசன்ட்ட சொன்னாராம்.
“இந்த நாவல் இவர வைச்சுத் தன்னையே எழுதிக்கிட்டதுபோல எனக்குத் தோணுது. அவ்ளோ மிஸ்டிக் இதுல இருக்கு”அப்டீன்னு ஸ்ரீநேசன் சொன்னார். இன்னும் அவர் நெறயச் சொன்னார். அவர் ‘தாண்டவராயன் கதை’யப் படிக்கப் படிக்க மறந்துட்டே போச்சுன்னு சொன்னதுமாதிரி எனக்கும் மறந்துபோச்சு. ஆனா அந்தப் பேச்சைக் கேட்டுட்டு இருந்தப்போ ஒரு புதிர்த்தன்மை எல்லாத்துலயும் சாம்பலா படர்ந்திருந்ததுபோல தோணுச்சு. ஸ்ரீநேசன் அவ்ளோ பரவசத்தோட அந்த நாவலைப் பத்திப் பேசினார்.
செல நாவல்களோட பேர்களைக் குறிப்பிட்டுச் சொல்லி… இதுகளை எல்லாம் விடவும் இந்த நாவல் ரொம்ப நல்லா வந்திருக்கிறதா ஸ்ரீநேசன் சொல்லிட்டு வந்து ஒக்காந்துக்கிட்டாரு. கண்டராதித்தன் கொஞ்சம் வெளில போய்;ட்டு ரொம்ப நிதானமா உள்ள வந்திருந்தார். ஸ்ரீநேசன் குறிப்பிட்ட நாவல்கள்ள ஜெயமோகனோட விஷ்ணுபுரமும் இருந்திச்சில்லயா… அவர் விஷ்ணுபுரத்தப் கப்னு புடிச்சுக்கிட்டாரு.
“இன்னா சொன்ன… விஷ்ணுபுரமா… அப்போ விஷ்ணுபுரம் முக்கியமான நாவல்னு நீ ஏத்துக்கற இல்ல…?”இப்டி ஆரம்பிச்சு விஷ்ணுபுரம் விஷ்ணுபுரம்னு பேசிட்டே இருந்தாரு. அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் இந்த நாவல் தொடர்பா ஏதாவது பிரச்னை முன்னாடி இருந்துச்சா… இல்லைன்னா ஜெயமோகன் மேல கண்டராதித்தனுக்கும் காண்டா… அதான் இப்டிப் போட்டு அழுத்தறாரான்னு எனக்கு ஒண்ணும் புரியலை. நல்லவேளை பின்னவீனத்துவத்தை ஒரக்க மொழிகிற யாரும் அங்க இல்லை. இல்லைன்னா ‘பிரதி என்ன சொல்லுதுன்னா… சொல்லப்படாத சொல்லுள் இருக்கிறது கதை’ன்னு ஆரம்பிச்சு கடுப்பேத்தியிருப்பாங்க.
அப்புறம் தூரன் குணா எந்திருச்சு முன்னாடி வந்தார். அவரும் ‘தாண்டவராயன் கதை’யைப் படிச்சிருந்தார்.
“இந்த நாவல் தமிழ்ல முக்கியமான நாவல் அப்டிங்கிறத நான் ஒத்துக்கிறேன். ஆனா முதன்மையான நாவல்ங்கிறத ஒத்துக்கமுடியாது”அப்டீன்னார். ஆனா அவரும் தாண்டவராயன் கதையோட எழுத்து ஒவ்வொரு கட்டத்துலயும் மாறி மாறிப் போயிட்டிருந்ததை சொல்லத்தான் சொன்னார். அதுவொரு வித்தியாசமான அனுபவம்னார். அவர் நெறயப் படிக்கக்கூடிய ஆள்னு அவர் பேச்சுலேர்ந்து உணர்ந்துக்க முடிஞ்சுது.
அப்புறம் குலசேகரனும் அந்த நாவலோட புதிர்த்தன்மை பத்தி சிலாகிச்சுச் சொன்னார்.
என்ட்டக் கேட்டாங்க.
“எனக்கு வெங்கடேசனோட மழை வீட்டின் தனிமை அல்லது மழை வீடு அப்டீங்கற கதை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அப்புறம் யாரோ சொன்னாங்க… வெங்கடேசன் கதைக்குள்ள சில ஜோடனைகளைக் கொண்டுவராரு அப்டின்னு. அதனாலயோ என்னமோ அப்புறம் படிக்கலை. இப்போ இந்தக் கூட்டத்துக்காக தாண்டவராயன் கதையப் படிக்க ஆரம்பிச்சேன். மொழியோட இலாவகம் பிரமிக்க வைக்கிறதா இருக்கு. அப்புறம் அதோட புதிர்த்தன்மை நம்மைக் கூடக் கூடக் கூட்டிட்டுப் போய்ட்டே இருக்கு. நாவலை வைக்கவே முடியலை. நிச்சயமா இது தமிழ்ல ஒரு சிறந்த நாவலா பேசப்படும்”அப்டீன்னு சொன்னேன்.
கூட்டத்துல நெறயப்பேர் அதே கருத்தோட இருந்ததாத் தோணவும் அஜயன் பாலா ஒரு விஷயம் சொன்னார். அதாவது, தாண்டவராயன் கதைக்காகத் தனியா ஒரு கூட்டம் நடத்தணும்… அதுல ஒரு ஐந்தாறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டா அந்தக் கதையோட பன்முகத்தன்மை இன்னும் வெளிப்படுத்தப்படக்கூடிய சாத்தியப்பாடு அமையும் அப்டீன்னு சொன்னார். அத நாங்கல்லாம் ஆமோதிச்சோம். கூட்டத்துல இளங்கோ கிருஷ்ணன்… இன்னுங் கொஞ்சப்பேர சொல்லி அவங்கல்லாம் அதப் பண்ணலாம் அப்டீன்னு முடிவு செய்ஞ்சாங்க.
தடாகம்.காம் பத்தி ஒருத்தர் பேசினார். அவங்க எதிர்பார்த்தத விட ரொம்ப நல்லா அந்த இணையத்தளம் போய்ட்டிருக்கிறதா சொன்னார். அப்புறம் ஒரு அறிவித்தல். இதழ்கள்ள வந்திருக்கிற கவிதைகள்ளாம் சேத்து ஒரு தொகுதியாப் போடப்போறாங்களாம்னுட்டு. ஸ்ரீநேசனத் தொடர்புகொள்ளச் சொன்னாங்க.
இந்தக் கூட்டம் ரொம்ப நெறைவா நடந்துச்சு. இல்லேன்னா இப்டி ராத்தூக்கம் முழிச்சு பஸ்ஸேறி வந்ததுக்கு என்ன புரயோசனம்?
நான் கௌம்பறப்போ அஜயன் சொன்னார்.
“ஒரு நல்ல எழுத்தை நாம கட்டி இழுத்துக்கிட்டு வரணும்ங்கிற அவசியமில்லை. அதுக்குரிய எடத்தை அது தானாவே வந்து சேரும்ங்கிறத நீங்க இப்பவாவது நம்பறீங்களா?”
நம்பித்தானே ஆவணும். வேற வழி?
பிற்குறிப்பு: நான் எதுக்கு இந்த விமர்சனத்த இப்டியொரு லாங்வேஜ்ல (மொழின்னா புரியாதுல்ல) எழுதியிருக்கேன்னு நெனைப்பீங்க… ஒழுங்கா ஆடி ஆடி ‘போர்’அடிக்குதுங்க. கொஞ்சம் தப்பாட்டம் ஆடிப் பாக்கலாமேன்னுட்டுத்தான்.)
நன்றி :
தமிழ்நதி